பள்ளியாடி திருத்தலத்தில் நாளை சமபந்தி விருந்து: ஏற்பாடுகள் தீவிரம்

பள்ளியாடி: பள்ளியாடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சர்வமத பிரார்த்தனை தலமான பழையபள்ளி திருத்தலத்தில் இன்று(15ம் தேதி) மாலை சர்வமத நல்லிணக்க விழாவும், நாளை(16ம் தேதி) சமபந்தி விருந்தும் நடக்கிறது. குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சர்வமத பிரார்த்தனை தலம் பள்ளியாடியில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் மூன்றாவது திங்கள் அன்று சமபந்தி விருந்து விழாவும், அதற்கு முந்தைய நாள் சர்வமத பிரார்த்தனை, மத நல்லிணக்க விழா நடக்கும்.

அதுபோல் இந்த ஆண்டும் இன்று மாலை சர்வமத பிரார்த்தனை, மத நல்லிணக்க விழா நடக்கிறது. சர்வமத பிரார்த்தனையின் பொது மாவட்டத்திலுள்ள முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு அவரவர் வழிபாட்டு முறையில் கொளுந்து விட்டு எரியும் கல் விளக்கு முன் அமர்ந்து பிரார்த்தனை நடத்துவர். இந்த பிரார்த்தனையில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வர். அதற்கு பின் மதநல்லிணக்க விழா, நலஉதவி வழங்குதல் நடக்கிறது. இதில் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலைகள் மற்றும் துணிரகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

இரவு, நாளை நடக்கும் சமபந்தி விருந்திற்கு தேவையான அறுசுவை உணவு தயாரிக்கப்படுகிறது. இப்பணியில் பொதுமக்கள் இரவு பகலாக நின்று உதவி செய்வர். அறுசுவை உணவில் சாதம், பருப்பு, சாம்பார், அவியல், ரசம், மோர், பாயசம், பழம், அப்பளம் போன்ற உணவு வகைகள் இடம்பெறும். இங்கு தரிசனத்திற்கு வரும் பொதுமக்களுக்கு தேங்காய் எண்ணெய் பிரசாதமாக வழங்கப்படுகிறது. நாளை காலை 10 மணியளவில் சர்வமத பிரார்த்தனைக்கு பின் அறுசுவை உணவு பரிமாறப்படும். இதில் நமது மாவட்டம் மற்றும் அண்டைய மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர். இரவு வரை சமபந்தி விருந்து பரிமாறுதல் நீடிக்கும். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியாடி பழைய பள்ளி அப்பா திருத்தலம் அறக்கட்டளை சார்பில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.

Advertisements

பள்ளியாடி பழைய பள்ளி வரும் 16 ல் சமபந்தி விருந்து

பள்ளியாடி : பள்ளியாடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சர்வத பிரார்தனை தலமான பழைய பள்ளி திருத்தலத்தில் இன்று (14-ம் தேதி) சர்வமத பிரார்தனை மற்றும் 15-ம் தேதி சமபந்தி விருந்து நடக்கிறது. குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சர்வ மத பிரார்தனை திருத்தலமான பள்ளியாடி பழைய பள்ளி திருத்தலம் திருப்பன்றிகோடு ரோட்டில், புலிக்குட்டிவிளையில் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற சம பந்தி விருந்து வரும் 16-ம் தேதி நடக்கிறது. அரிசி, காய்கறிகள், தேங்காய்கள், வாழைத்தாறுகள் மற்றும் தேங்காய் எண்ணெய் உட்பட உணவு பொருள்கள் இங்கு குவிக்கப்பட்டுள்ளது. இந்த உணவு பொருட்களை சமைப்பதற்கான ராட்சத அடுப்புகள் திருத்தல வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய 24-அடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பெரிய பாத்திரங்கள் வைத்து உணவு பொருட்களை பொதுமக்கள் உதவியோடு சமைக்கப்பட்டு அறுசுவை உணவு சமபந்தி விருந்தின்போது பரிமாறப்படுகிறது. நாளை மாலை சர்வ மத பிரார்த்தனைகள் மற்றும் ஏழைமக்களுக்கு சேவை திட்ட உதவிகள் வழங்குதல் நடக்கிறது. மத நல்லிணக்க விழா மற்றும் சர்வ மத பிரார்தனைகளின் பலர் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை பள்ளியாடி பழையபள்ளி அப்பா திருத்தல நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.

பள்ளியாடி பழையபள்ளி திருத்தலத்தில் வரும் 16ம் தேதி சமபந்தி விருந்து

பள்ளியாடி: பள்ளியாடி பழையபள்ளி திருத்தலத்தில் வரும் 16ம் தேதி சமபந்தி விருந்து நடக்கிறது. குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற 11வது சிவாலயமான திருப்பன்றிக்கோடு மகாதேவர் கோயில் செல்லும் ரோட்டில் புலிக்குட்டிவிளையில் பழையபள்ளி திருத்தலம் அமைந்துள்ளது. பழமையான ஒரு பெரிய புளியமரத்தின் சோலையில் அமைந்துள்ள இந்த திருத்தலம் மேற்கூரையின்றி, விக்ரகம் இன்றி, வெட்ட வெளியில் அமைந்துள்ளது.

தேங்காய் எண்ணெயில் எரியும் விளக்குகளின் ஒளியில் இங்கு அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் வந்து வழிபடுவர். குமரி மாவட்டத்தில் ஜாதி, மதம், இனம், மொழியில் வேறுபட்ட மக்கள் இருப்பினும் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக கலந்து கொண்டு ஒரே இடத்தில் அவரவர் முறையில் பிரார்த்தனை செய்வது சிறப்பாகும். மேலும் இங்கு வழிபாடு செய்வதற்கு அர்ச்சகர் இல்லை. திருத்தலத்திற்கு வரும் மக்கள் அவர்கள் கொண்டு வரும் பலவிதமான பொருட்களை காணிக்கையாக எரியும் விளக்கு முன் வைப்பர். தேங்காய் எண்ணெய், ஊதுவர்த்தி, மொழுகுவர்த்தி, கற்பூரம் போன்றவைகளை எரிய வைத்து வாழைப்பழத்தார், தேங்காய், பலாப்பழம், ஆடு, கோழி, விளக்கு, பாத்திரங்கள், வெள்ளி மற்றும் தங்கத்தால் அணிகலங்கள் போன்றவைகள் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.

மேலும் இங்கு முக்கியமாக சமபந்தி விருந்து நடக்கிறது. ஆண்டிற்கு ஒரு முறை மார்ச் மாதம் மூன்றாவது திங்கள் சமபந்தி விருந்து கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டம் மட்டுமின்றி அண்டைய மாநிலமான கேரளா மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் சமபந்தி விருந்தில் கலந்து கொள்வர். சமபந்தி விருந்திற்கான உணவு பொருட்களை பொதுமக்கள் திருத்தல வளாகத்தில் கொண்டு சேர்க்கின்றனர். இவை அனைத்தையும் சேகரித்து சமையல் செய்து சமபந்தி விருந்து பரிமாறப்படுகிறது. சமபந்தி விருந்தில் சாதம், பருப்பு, சாம்பார், அவியல், பொரியல், பாயாசம், ரசம், மோர் போன்றவை திருத்தல வளாகத்தில் தரையில் பாய் போட்டு வாழையிலையில் பரிமாறப்படும்.

இந்த சமபந்தி விருந்து வரும் 16ம் தேதி காலை முதல் துவங்கி இரவு வரை நடக்கிறது. 15ம் தேதி மதநல்லிணக்க விழா மற்றும் சர்வமத பிரார்த்தனை நடக்கிறது. அனைத்து மதங்களை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு அவர்கள் மதத்தின் படி பிரார்த்தனை செய்வதோடு இறுதியில் சர்வமத பிரார்த்தனையும் நடக்கிறது. சமபந்தி விழாவன்று காலை அனைத்து கூட்டு வகைகள் பெரிய பாத்திரங்களில் திருத்தலத்தில் அமைந்துள்ள எரியும் விளக்கு முன் படைத்து அனைத்து மத தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சர்வமத பிரார்த்தனை செய்கின்றனர். அதற்குபின் உணவு பரிமாறப்படுகிறது.

மேலும் இங்கு பொதுமக்கள் காணிக்கையாக கொண்டு வரும் உணவு பொருட்களை அனைவரும் பகிர்ந்து சாப்பிடுவர் என்பது தான் இந்த திருத்தலத்தில் சிறப்பு அம்சம். அதோடு இங்கு அமைந்துள்ள விளக்குகளில் ஊற்றப்படும் தேங்காய் எண்ணெய் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை பொதுமக்கள் தலையில் தேய்ப்பதோடு குடிக்கவும் செய்கின்றனர். விழா ஏற்பாடுகளை பழையபள்ளி அப்பா திருத்தல அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.